பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 14:25-38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.

26. ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.

27. யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

28. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.

29. அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

30. இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

31. அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.

32. அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

33. அப்பொழுது, இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

34. நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.

35. பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

36. அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37. அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

38. அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 14