பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 21:1-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.

2. ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.

3. நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.

4. இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

5. அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,

6. அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.

7. அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.

8. அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.

9. அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,

10. தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.

11. அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.

12. அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 21